கியு.ஆர். முறைமையைப் பொருட்படுத்தாமல் எரிபொருளை விநியோகித்த 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று (07) முதல் எரிபொருளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ நேற்று (07ஆம் திகதி) தெரிவித்தார்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியு. ஆர். முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாக 66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்படி எரிபொருளை விநியோகிக்குமாறு தமது சங்கம் அறிவித்துள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் பெட்ரோலியம் வழங்குனர் சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன கூறுகையில், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த எரிபொருள் நிலையங்கள் நகர எரிபொருள் நிலையங்கள் அல்ல என்று கூறினார் .
சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் கியு. ஆர் முறைக்கு வெளியே எரிபொருளை வழங்கியதற்காக 40 எரிபொருள் நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியன் ஒயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் காட்ட அந்த 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டாலும் அது நியாயமான முடிவாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிபதிகள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகள், வைத்தியர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ‘கியூஆர்’ முறைக்கு வெளியே எரிபொருளை விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கொழும்பை சுற்றியுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு அம்பாறை, மட்டக்களப்பு அல்லது வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமாயின், ‘கியூஆர்’ அமைப்பின் மூலம் எரிபொருளை விடுவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியுமா என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.