மன்னார் – சாந்திபுரம் பகுதியில், நேற்று இரவு, நபர் ஒருவர், குழு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில், எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக, சாந்திபுரம் பகுதியில், இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை, பொலிஸ் வரை சென்று சமாதனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு, குறித்த இரு குடும்பத்திற்கு இடையில், மீண்டும் பிரச்சினை இடம்பெற்ற நிலையில், முரண்பாடு முற்றியுள்ளது.
இதன் போது, பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய போது, எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட 5 பேர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பில், சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், மன்னார் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.