தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலீஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுப் பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களின் சிபார்சின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில், போதைக்கு அடிமையாகி இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைத் தேவையான உளவளத் துணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் நேரடியாக அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் பொலீஸார் எடுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைளிலும் பல்கலைக்கழகம் குறுக்கிடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், அவர்கள் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்கள் இன்று நண்பகல் பரீட்சை முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் மாத்திரமே போதை மாத்திரை உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள், இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தன.