
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில
– 267 பில்லியன் டொலர் பெறுமதி
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு இன்றைய அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.
எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று, பல பில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நளின் பண்டார, முதிதா பிரஷாந்தி, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி. ரத்னசேகர, வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர். ஒல்கா ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்