
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
ரொய்ட்டர் , பீ.பீ.சி, வீரகேசரி மற்றும் மின்னூடகங்களிலும் துணிவோடு பணியாற்றிவந்த செயல் வீரனான மாணிக்கவாசகம் ஐயா, நீண்ட நெடுங்காலங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனது எழுத்தாயுதத்தை நேர்மையுடன் பிரயோகித்து வந்தவர். பக்கம் சாராது,சோரம் போகாது, ஓய்வொழிச்சலின்றி ஊடக தர்மத்தை மதித்து உண்மையுடன் செயலாற்றி வந்த ஊடகப் பேராளுமையின் வெற்றிடம் ஒட்டுமொத்த தமிழினத்துக்குமே துயரத்தை தந்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் மறுகுரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் எமது குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு மறைகரமாக நின்று ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்த தன்னார்வலரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.
தேசத்தை நேசித்த மூத்த பேராளுமையின் எதிர்பாரா இழப்பினால் துயர் சுமந்து நிற்கின்ற தமிழினத்திற்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் கனத்த மனதுடன் எமது இரங்கலை பகிர்ந்துகொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்மா பரம பதமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் – என்றுள்ளது.