கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் – யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடந்த காலங்களில் பின்பற்றிய நடைமுறைகளை இனிமேலும் பின்பற்றுங்கள். இன்றையதினம் மூவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிவதை கடைப்பிடியுங்கள், தனிநபர் இடைவெளியை பேணுங்கள், சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாக கழுவுங்கள், அநாவசியமாக கை குலுக்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், இயன்ற அளவு கூட்டமாக ஒன்று சேர்வதை தவிருங்கள்.

இதுபோன்ற செயற்பாடுகளில் தான் மீண்டும் ஒரு கொரோனா பேரலை ஏற்படாது தவிர்க்க முடியும். முன்பு போன்ற நிலை ஏற்படாது தவிர்க்க அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews