புதுவருட கொண்டாத்திற்கு பணம் தேவை என கடந்த 14 ம் திகதி மீன்பிடி தோணியை விற்பதாக தெரிவித்து சென்று காணாமல் போன ஒருவர் முதலை கடிக்கு உள்ளாகி கை கால்கள் இல்லாத நிலையில் இரு தினங்களின் பின்னர் ஏறாவூர் மயிலம்பாவெளி வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.விஜயராஜா தெரிவித்தார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஈந்நம் தீவு நாவங்காட்டைச் சேர்ந்த 48 வயதுடைய டீனவரான அமரசிங்கம் ஜெயச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புதுவருட கொண்டபட்டத்துக்கு பணம் தேவைக்காக தனது மீன்பிடி தோணியை விற்பனை செய்து பணத்துடன் வருவதாக சம்பவதினமான கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு சைக்கிளில் வெயியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து இவரை உறவினர் தேடிவந்த நிலையில் தோணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாவிக்கரையில் அவருடைய சைக்கிள் இருந்துள்ளதுடன் அங்கு தோணியை காணவில்லைஎன பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் காணாமல்போன குறித்த நபரை தேடிவந்த நிலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி வாவியில் சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கை கால்கள் அற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து நீதவானின் உத்தரவை பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் மற்றும் வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.