இந்திய – அவுஸ்திரேலிய தட்டில் உள்ள மாறுபாடு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் சிறிய நிலநடுக்கங்களை புவியியலாளர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அனைத்தும் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளன. பதுளை, கண்டி மற்றும் தென்கிழக்கு பகுதியிலுள்ள பிற மாவட்டங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய நிலநடுக்கம் ஏற்படாது என்று கருதப்பட்டாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஒரு மாகாணத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் சிறிய நிலநடுக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தென் பகுதியில் பல நில அதிர்வு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 7ம் திகதி காலை 10.38 மணியளவில் லுணுகம்வெஹெர பகுதியில் 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அத்துடன், ஆகஸ்ட் 24ம் திகதி இரவு 9.29 மணிக்கு யாலா மண்டலம் 01 க்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 என பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.