நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கும் நோக்கில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பையேற்று, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையிலான கனேடிய வர்த்தக பிரமுகர்கள் குழுவொன்று கடந்த வருடம் நவம்பர் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்திருந்தது.
கனடா – இலங்கை வர்த்தக கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, அதன் பணிப்பாளர் கணேசன் சுகுமார், அதன் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் உள்ளடங்கிய மேற்படி வர்த்தக பிரமுகர்கள் குழு, இலங்கைக்கான தமது விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது இலங்கைக்கான தமது விஜயத்தின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்தியிருந்த கனடா – இலங்கை வர்த்தக கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை,
அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கனடாவுக்கு விஜயம் செய்தபோது, எம்மை இலங்கைக்கு வருகை தருமாறும், இங்கு எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.
எனவே, இலங்கையுடனான இணைப்புப்பாலத்தை உருவாக்கும் அதேவேளை, இலங்கையிலிருந்து பெற்றவற்றை எமது முதலீடுகள் மூலம் மீண்டும் இந்நாட்டுக்கு திருப்பிச் செலுத்தவேண்டும் என எண்ணுகின்றோம் என்று கூறியிருந்தார்.
இருப்பினும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான விருப்பக்கடிதத்தை (லெட்டர் ஒஃப் இன்ட்ரஸ்ட்) அம்முதலீட்டாளர்கள் கடந்த நவம்பர் மாதமே உரிய திணைக்களங்களுக்கு அனுப்பிவைத்துள்ள போதிலும், இன்னமும் இலங்கையின் தரப்பிலிருந்து அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.
நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உரிய பதிலை வழங்காமல் தாமதிப்பதென்பது அம்முதலீட்டாளர்கள் அதிருப்தியடைவதற்கும் நாட்டின் பொருளாதாரம் மேலும் பின்னடைவை சந்திப்பதற்குமே வழிவகுக்கும் என்றும் முதலீட்டாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதை பற்றி கனேடிய முதலீட்டாளர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் கடந்த வருடம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் மூலம் தெளிவுபடுத்தியிருந்த வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவிடம் கேட்டறிய முற்பட்டபோதிலும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.