பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.
இந நிலையில், நேற்று நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில், எரிபொருள் இறக்குமதி, முகாமை, விநியோகம் மற்றும் விற்பனை தரவுகளை ஆய்வு செய்த பிறகு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இன்று ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு காரணமாக, மாதாந்திர எரிபொருள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.