நேற்றையதினம், யாழ். நகர் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு, காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில், காலாவதி திகதியில் மாற்றம் செய்து, விற்பனைக்காக வைத்திருந்த பெருமளவிலான சோடா போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இது குறித்து தகவல் பெறுவதற்கு ஊடகவியலாளர் ஒருவரால் யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது காலாவதியான சோடா போத்தல்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய உத்தியோகத்தர் ஒருவர் மேலதிக விபரங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனை தொடர்பு கொள்ளுமாறு அலைபேசி இலக்கத்தினை வழங்கினார்.
அதன்பின்னர் குறித்த சுகாதார பரிசோதகருக்கு அழைப்பு மேற்கொண்டு, தான் ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்தி விட்டு குறித்த விடயம் தொடர்பில் வினவினார்.
அதற்கு அந்த சுகாதார பரிசோதகர் “என்னால் தகவல் வழங்க முடியாது” என கூறினார். அதற்கு குறித்த ஊடகவியலாளர்”பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் இருந்தே தங்களது அலைபேசி இலக்கம் வழங்கப்பட்டது” என கூறியவேளை சிறிது நேரத்தில் அழைப்பு மேற்கொள்வதாக கூறிவிட்டு சுகாதார பரிசோதகர் அழைப்பை துண்டித்தார்.
அதன்பின்னர் பொது சுகாதார பரிசோதகரை மீண்டும் அழைத்த வேளை அவரது தொலைபேசியில் இருந்து பதில் கிடைக்கவில்லை. பின்னர் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் அலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்ட வேளை அவரது அலைபேசி உறக்க நிலையில் இருந்தது.
பொது சுகாதார பரிசோதகர் இவ்வாறு தகவல் வழங்க மறுத்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.