புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, சுற்றுலா பயணிகளை கவரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை ரயில்வேக்கு சொந்தமான காணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத மார்க்கத்தின் 48 கிலோமீற்றர் தூரம் 33 மில்லியன் ரூபா கோடி புனரமைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.பிரிமா மாவை மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதற்கு தனியான வேலைத்திட்டம் உள்ளது. ஏனைய பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த முறைமை பயன்படுத்தப்படலாம்.இதேவேளை, நுவரெலியா, பண்டாரவளை மற்றும் வெலிமடை பிரதேசங்களில் பயிரிடப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகள் புகையிரதங்களில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் கட்டப்பட்டுள்ளன.தனியார் துறையுடன் கூட்டுத் திட்டமாக சரக்குகள் எதிர்காலத்தில் கொண்டு செல்லப்படும். ரயில்வேக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சுமார் 14,000 ஏக்கர் ரயில்வேக்கு சொந்தமானது. ரயில்வேயின் முழு உரிமையை வைத்து பல்வேறு திட்டங்களுக்கு நிலங்களை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை , மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, ஹிக்கடுவ, எல்ல, கம்பளை, கட்டுநாயக்க மற்றும் கடுகன்னாவ புகையிரத நிலையங்களில் மிகவும் கண்கவர் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்களைச் செய்வதன் மூலம் நாட்டின் வருமானமும் வேலை வாய்ப்பும் பெருகும் வகையில் வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கு விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மலையகத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட பொருட்களைக் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கினார். இத்திட்டத்தின் முதல் திட்டத்தை செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தெற்கிற்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.