உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் :அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதை, அதனை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் அவதானிப்பின்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 85 மற்றும் 86ம் பிரிவின் குற்றவியல் அம்சங்கள், நீதி அமைப்பின் கொள்கைகளை மீறுவதாக அமைந்துள்ளன என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவை, குடிமக்களின் சட்ட உரிமைகளுக்கு முரணானவையாக கருதப்படுகின்றன.

குறித்த சரத்துக்கள் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவற்கான சுதந்திரம், பயணங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே சட்டத்திற்கு இணங்க திருத்தங்களைச் செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.

திருத்தமின்றி சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டால் அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews