
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில், அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்யவும், மீள் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் மீள வழங்கவும் வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.
சட்ட சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த நீதிவான், வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஸ்டை செய்வதற்கு உத்தரவிட்டதோடு, அந்தப் பணிகளை தொல்லியல் திணைக்களத்தினர் கண்காணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.