இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள் – ஆய்வாளர் நிலாந்தன்

“நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை போல தொழிற்படுபவர்கள்.இந்த உலகத்தில் இதுவரையிலும் இல்லாத ஒன்றை நமக்கு தருவார்கள்.ஏற்கனவே இருக்கின்ற படைத்தற் சாதனங்களின் ஊடாக இதுவரை இருந்திராத,ஒரு புதிய அனுபவத்தை நமக்குத் தருகிறார்கள்.அதாவது இருப்பவற்றின்மூலம் அல்லது எமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றின்மூலம் இதுவரையிலும் இருந்திராத அல்லது ஏற்கனவே எமக்குத் தெரிந்திராத ஒரு புதிய அனுபவத்துக்கு எம்மை அழைத்துச் செல்பவர்கள்.

தஜேந்திரனும் அப்படித்தான் சொல்கிறார்.ஏற்கனவே உள்ள வரைதல் சாதனங்கள் அவருக்கு போதவில்லை.அதனால் இயற்கையில் இருந்து புதிய படைத்தல் சாதனங்களை அவர் பெறுகிறார்.இயற்கையாக நம் மத்தியில் உள்ள மண்ணை,கல்லை,சருகை,சாம்பலை,கறையான் புற்றை, என்று இன்னபிறவற்றை அவர் புதிய ஒழுங்கிற்குள் வைக்கின்றார்.அவர் நம் முன்வைக்கும் அப்புதிய ஒழுங்குதான் அவர் காட்டும் புதிய உலகமும். புதிய இயற்கையும்.

இவ்வாறு இயற்கையாக அமைந்த நிலவுருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியை தமது படைப்பு வெளியாக்கி,இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து இன்னொரு இயற்கையை ஒழுங்கமைக்கும் கலை முயற்சிகள் “ஏத் ஆர்ட்”(Earth art),அல்லது “லாண்ட் ஆர்ட்”(Land art)என்று அழைக்கப்படுகின்றன.அமெரிக்காவில் 1960களின் பிற்கூறில் தொடங்கிய இக்கலை முயற்சிகளைப்  பற்றி பா.அகிலன்-தஜேந்திரனின் ஆசிரியர்களில் ஒருவர்-இணுவிலில் தஜேந்திரனின் முதலாவது காண்பியக் கலைக் காட்சியில் உரை நிகழ்த்தியபோது சுட்டிக்காட்டினார்

தஜேந்திரன் அதனை “இன்மையின் கலை” என்று கூறுகிறார்.36வயதான தஜேந்திரன்,தோற்றத்திலும் நடையுடை பாவனையிலும் சாதுவானவர். உரத்துக் கதைப்பதில்லை.நிலமதிர நடப்பதும் இல்லை.ஆனால் அவருடைய ஆசிரியர் சனாதனன் கூறுவது போல அவருக்குள் ஒரு நெருப்புண்டு.

இருபாலையில் பருவ காலக் கடலேரியாக மாறும் உப்பாற்றின்  விளிம்பில்,ஒரு வறிய குடும்பத்தில் தஜேந்திரன் பிறந்தார்.உப்பாற்றின் விளிம்பில் காணப்படும் ஆறுமுகம் சுவாமிகளின் சமாதி கோவிலுக்குப் பின்னால் அவருடைய வீடுண்டு.உப்பாற்றின் விளிம்பில் அமைந்துள்ள சிறிய வைரவர் கோவிலை உபாசிக்கும் குடும்பம் அது.தனது முதுகலைப் பட்டப் படிப்புக்காக லாகூர் பெகன் ஹவுஸ் தேசியப் பல்கலைக்கழகத்தில்(Beaconhouse national university, Lahore – Mariam Dawood school of visual Arts and Design) அவர் முயற்சித்த பரிசோதனைகளை அவர் “இல்லாதிருத்தலின் கலை – Art of being nothing) என்று வர்ணிக்கிறார்.லாகூரில் தனது முதுகலை கற்கைக்கான ஆய்வுச் செய்முறையாக முதலாவது காண்பியக் கலைக் காட்சியை அங்கு ஒழுங்கமைத்தார்.

அடுத்த கட்டமாக,யாழ்ப்பாணம் இணுவிலில் உள்ள மக் லியொட் (Mcleod hospital) மருத்துவமனையின் பிரசவ விடுதி வளாகத்தில் மற்றொரு  காட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார்.அதன்பின் கடந்த மாதம் மற்றொரு காட்சி வட்டுக்கோட்டை சங்கரத்தையில் உள்ள யோகர் சுவாமிகள் நினைவு இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.சங்கரத்தையில் ஒழுங்குபடுத்தப்பட்ட காண்பியக் கலைக் காட்சி முன்பு இணுவிலில் நிகழ்த்தியதன் தொடர்ச்சிதான்.அதிலிருந்து இது பெரியளவுக்கு வேறுபடவில்லை.ஆனால் இரண்டும் நடத்தப்பட்ட நிலக் காட்சிகள் வேறானவை.

இணுவில் பிரசவ விடுதி அமைந்திருப்பது தென்னிந்திய திருச்சபையின் வளாகத்தில்அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவ இறை ஊழியர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு வளாகம்.இப்பொழுது பெருமளவுக்கு பாழடைந்துவிட்ட ஒரு கட்டடத் தொகுதி.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இங்கேதான் பிறந்தார்.பாழடைந்த மரபுரிமைச் சொத்தாகக் காணப்படும் அந்த மாடிக் கட்டடத்தை பின்னணியில் வைத்து தஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது முதலாவது காண்பியக் கலைக் காட்சியை ஒழுங்குபடுத்தினார்.ஒரு காலம் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய திருச்சபை முன்னோடிகள் நடத்திய அப்பிரசவ விடுதி இப்பொழுது பாழடைந்து காணப்படுகிறது.அதன் பழைய சுண்ணாம்புச் சுவர்கள் அப்படியே இருக்கின்றன.கூரை இல்லை.அப்பாழடைந்த பிரசவ  விடுதியை தஜேந்திரன் ஓர் ஆர்ட் கலரியாக மாற்றினார்.அந்த மாடிக் கட்டடத்தையும் அதன் சுற்றயலையும் ஓர் ஆர்ட் கலரியாக மாற்றினார்.அங்கிருந்த செம்மண் தரை,கற்கள், காய்ந்த சருகுகள்,சாம்பல், குருமணல் என்பவற்றை வைத்து ஒரு புதிய அனுபவத்தை நமக்குத் தர முயற்சித்தார்.

அந்த வளாகத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் அவர் தனது காட்சியை ஒழுங்கு படுத்திய வளாகம் வித்தியாசமானது. முன்னையது ஒரு புரட்டஸ்தாந்து திருச்சபையின் வளாகம்.அண்மையில் செய்தது யாழ்ப்பாணத்து சித்தர் பாரம்பரியத்தில் வந்த ஒரு சித்தருடைய வளாகம்.யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளுடைய சிவத்தொண்டன் நிலையத்தைக் கட்டிக் கொடுத்த யோகரின் சீடரான நில அளவையாளர் ஒருவருடைய பழைய வீட்டு வளாகம் அது.

இரண்டு வளவுகளினதும் நிலவுருக்களும் வேறு வேறு.எனினும் முன்னதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது காட்சியும் அமைந்திருந்தது.அதேசமயம் சங்கரத்தை வளவில் உள்ள பழைய வீட்டில் பாவனையில் இல்லாத வாகனத் தரிப்படத்தில் அவர் ஒழுங்கமைத்த புதிய சதுரங்கள் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. அதிர்ச்சியூட்டும் நவீனம் அங்கே உண்டு.

இங்கு ஒரு சுவாரசியமான ஒற்றுமையைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவருடைய முதலாவது காண்பியக் கலைக் காட்சி ஒழுங்கு செய்யப்பட்டது,இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் உள்ள லாகூரில்.இரண்டாவது காட்சி,யாழ்ப்பாணத்தின் தென்னிந்திய திருச்சபை வளாகத்தில்.மூன்றாவது காட்சி,யோகர் சுவாமிகளைச் சேர்ந்த வளாகத்தில். மூன்று மதப் பண்பாட்டு பயில்களங்களில் அவர் தனது காண்பியக் கலைக் காட்சிகளை ஒழுங்குபடுத்தியுள்ளார். ஆனால் அவர் நமக்குள் கிளர்த்த முற்படும் கலை அனுபவம் மத அடையாளங்களுக்கு அப்பாலானது. இதுவரையிலுமான தனது 3 காட்சிகளையும் அவர் மூன்று வேறு மதப் பண்பாடுகளுக்குரிய வளாகங்களில் ஒழுங்குபடுத்தியிருந்தமை என்பது தற்செயலானது அல்ல.ஏனென்றால் தஜேந்திரன் முதலாவதாக ஓர் ஆன்மீகவாதி.இரண்டாவதாகத்தான் ஓவியன், கவிஞன்.

எனினும் அவருடைய கவிதைகளில் அவருடைய எடுத்துரைப்புக்களில்  காணப்படும் வெளிப்படையான ஆன்மீகம் அவருடைய காண்பியக் கலைக் காட்சிகளில் கிடையாது.அவை சாதாரணமாக நாங்கள் புழங்கும் மண்ணும் கல்லும் சருகும் சாம்பலும் கறையான் புற்றும் இன்னபிறவும்தான்.ஆனால் அவற்றை தஜேந்திரன் ஒழுங்குபடுத்தும் பொழுது ஒரு புதிய அனுபவம் சித்திக்கின்றது.பிக்காசோ கூறியதுபோல தஜேந்திரன் இன்னொரு இயற்கையாகச்  செயற்படுகின்றார்.

தமிழில் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான பரிசோதனைகள் அரிதிலும் அரிது.ஆனால் அவருடைய திறமைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.யாழ்.பல்கலைக்கழகத்தால் உமிழ்ந்து விடப்பட்ட ஆளுமைகளில் அவரும் ஒருவர்.அவருடைய திறமையே அவருக்கு எதிரியானது.ஆனால் லாகூரிலிருந்து சங்கரத்தை வரையிலுமான அவருடைய பரிசோதனைகள் அவரை இன்னொரு இயற்கையை சிருஷ்டிக்கும் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவி வருகின்றன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews