வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டும் ஒரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வழியுறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வோர்ட் ரீஷ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் விசேட பிரதிநிதி சனா ரஸ்ஸாலா ஆகியோருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.