‘வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர்’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்ததால், அனைவரும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்த அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக, பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமைகள் மற்றும் சலுகைகளை வென்றெடுப்பதன் மூலம், உழைப்புக்கு சரியான மதிப்புக் கிடைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இன்றைய நாளின் தமது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி, உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
2048ஆம் ஆண்டளவில் முன்னேற்றமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான புதிய சீர்திருத்தப் பாதையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் அழைப்பதோடு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக அவர்களை வாழ்த்துவதாகவும் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.