
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்சர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குகள் பெறுமதியற்றவை ஆகும். தத்தமது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மாத்திரமே அவர்களது கைகள் உயர்த்தப்பட்டன.
மக்களுக்காக அவர்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் ஆணை பெற்ற எவரும் அங்கத்துவம் பெறாத தற்போதைய நாடாளுமன்றம் செல்லுபடியற்றதாகவே காணப்படுகிறது. இவ்வாறான நாடாளுமன்றமே நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை சட்டமாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவேதான், இந்த நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், மறுபுறம் மே தினக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய தலைவர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சித்து வருகிறது.
ராஜபக்சர்களை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் நாட்டின் தலைவரானால் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என குறிப்பிட்டார்.