
பொல்பெத்திகம பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கூரிய ஊசியினால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது புத்தகப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர் மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக குத்தியுள்ளார்.
இதனால் குறித்த மாணவன் வலியால் அலறிய நிலையில், பாடசாலை அதிபர் மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.