
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த யோகதாசன் லக்ஸன் வயது (25) என்பவர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைசெய்த குற்றச்சாட்டின்பேரில் கைதாகி விளக்கமறியலில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்துவந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சந்தேகநபர் நீதிமன்ற கூட்டில் எறிய நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த சேவிங் பிளேட்டினை திடீரென எடுத்து தற்கொலை செய்வதற்காக நீதவான் முன்னிலையில் தனது கழுத்தை அறுத்ததையடுத்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த பொலிசார் உடனடியாக செயற்பட்டு தற்கொலை செய்ய முயற்சித்தவரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2021 ஜூன் மாதம் தனது மனைவியாரின் தந்தையையும் தன் குழந்தையையும் கொலைசெய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர் எனவும் இவரின் குழந்தை மரணித்துப்போன நிலையில், இவர் வழக்கிலிருந்து நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.