இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது.சி.அ.யோதிலிங்கம்

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது

.

இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தினத்தில் ஆற்றிய உரை பலத்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. “நாட்டை முன்னேற்ற வேண்டுமென்றால் இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். தமிழ்த்தரப்பு தூர விலகி நிற்பதனால் எந்தப்பயனும் இல்லை. அவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” என்பதே இவ் உரையின் சாராம்சம் ஆகும். இதில் இரண்டு உண்மைகளை ரணில் ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்தி உள்ளார். ஒன்று இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இரண்டாவது தமிழ் மக்கள் இந்த அரச கட்டமைப்புடன் இல்லை வெளியே தான் நிற்கின்றனர்.

இந்த உண்மைகள் தமிழ் மக்களின் இறைமைப்பிரச்சினையுடன் தொடர்புடையவை. இதனை வெளிப்படுத்தியமைக்காக தமிழ்த்தரப்பு ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். சிங்களத்தரப்பில் ஒரு பிரிவிற்க்காவது இந்த உண்மைகள் புரிய வேண்டும். ஜனாதிபதியின் உரைக்கான எதிர்வினை சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், மனோகணேசன் ஆகியோரிடமிருந்து வெளிவந்தது. இவர்களில் சுமந்திரனும் மனோகணேசனும் இனப்பிரச்சினையை இறைமைப்பிரச்சினையாகப் பார்க்கவில்லை  மாறாக அடையாளப்பிரச்சினையாகவே பார்க்கின்றனர்.

மனோகணேசன் கொழும்புத் தமிழ்அரசியல்வாதி என்ற வகையில் அது புரிந்து கொள்ளக்கூடியதே! ஆனால் சுமந்திரன் தமிழர் தாயக அரசியல்வாதி. அவர் வலிந்து இனப்பிரச்சினையை அடையாளப்பிரச்சினையாக மாற்ற முற்படுகின்றார். தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாட்டின் மையப்புள்ளியும் இது தான். அண்மைக்காலத்தில் தன்னைத்தமிழ்த்தேசியவாதியாக காட்ட முற்படினும் நடைமுறையில் அவர் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வெளியில் தான் நிற்கின்றார்.
ரணில் உட்பட தென்னிலங்கையில் உள்ள பெருந்தேசியவாத பிரிவினரும் இனப்பிரச்சினையை அடையாளப்பிரச்சினையாகவே பார்க்கின்றனர்.

இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் அடையாளப்பிரச்சினையாக  சுருக்க விரும்புகின்றனர் எனலாம். சிங்களத்தரப்பு தமிழ் அரசியல் தொடர்பாக முன்வைக்கின்ற உயர்ந்த நிலைப்பாடு இது தான். இதற்கு மேல் செல்வதற்கு அவர்கள் எவரும் தயாராகவில்லை.
தமிழர்கள் ஒரு சிதைந்த இனக்குழுவாக மாற்றும் இன அழிப்பு முயற்சிக்கு இந்தப் பிரிவினரும் ஆதரவு தான். பெரும்தேசியவாதத்தின் இனவாதபிரிவு இதற்கும் தயாராகவில்லை என்பது வேறு கதை.
இந்தியாவும் இறைமைப்பிரச்சினையாகப் பார்க்க விரும்பவில்லை. இறைமைப்பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டால் இந்தியாவிலும் அது எதிரொலிக்கும் என்ற அச்சம் அதற்கு வந்திருக்கலாம். 13 வது திருத்தம் என்பதே அடையாளப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு தான். 13 வது திருத்தத்திற்கு மேல் செல்வதற்கு இந்தியா இன்னமும் விருப்பத்தைக் காட்டவில்லை. மேற்குலகம் இறைமைப்பிரச்சினைக்கு சமஸ்டி ஆட்சி முறைக்கூடாக தீர்வு கண்ட பிரதேசம் எனினும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவிற்கு பின்னே அவை இருப்பதால் தமது நிலைப்பாட்டை அடக்கி வாசிக்க முற்படுகின்றன.


தமிழ்த்தரப்பிலும் இறைமைப்பிரச்சினைக்கும் அடையாளப்பிரச்சினைக்கும் இடையில் வேறுபாடு காண முடியாத மயக்கம் நிலவுகின்றது. இதனால் தான்  சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை சிறுபான்மை இனம் என விழிக்க முயல்கின்றனர். சிறுபான்மை இனம் என்பதே அடையாளப்பிரச்சினைக்கான சொற்பதம் தான். தமிழ் ஊடகங்களிலும் இந்த மயக்கம் நிலவுகின்றது. உதாரணமாக வெடுக்குநாரி மலை விவகாரத்தை சைவ மதம் மீதான தாக்குதல் என கருதினால் அது அடையாளப்பிரச்சினை. மாறாக தமிழ்த்தேசத்தை தாங்கும் தூண்களில் ஒன்றான கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என வெளிப்படுத்தினால் அது இறைமைப்பிரச்சினை.  உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினையை அடையாளப்பிரச்சினையாக உருவகித்த காலம் 1949 உடன் முடிவடைந்து விட்டது.


தமிழ் இன அரசியல் 1921 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி சேர்.பொன். அருணாசலம் உருவாக்கிய தமிழர் மகாசபையுடன் ஆரம்பமானது. 1949 ம் ஆண்டு தமிழரசுக்கட்சி தோன்றும் வரை இனப்பிரச்சினை அடையாளப்பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. 1924 ம் ஆண்டு அருணாசலம் மறைய தமிழ் இன அரசியலை முன்னெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அடையாள அரசியலையே மேற்கொண்டார். அவரது 50:50  கோரிக்கை அடையாள அரசியல் கோரிக்கையே! அருணாசலமும் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் முழு இலங்கையிலும் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியலையே நகர்த்த வெளிக்கிட்டனர். அருணாசலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழர் மகா சபையின் அங்குராப்பண கூட்டத்தில் “தமிழ் அகத்தை பலப்படுத்த வேண்டும்”  என்று குறிப்பிட்டார். முழு இலங்கைத்தீவிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா”  என்ற கோசமும் அடையாள அரசியலுக்கு உட்படுத்தப்பட்டதே.


காலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களும் இனப்பிரச்சினையை அடையாளப்பிரச்சினையாகவே பார்த்தனர். இதனால் நல்லிணக்க செயற்பாட்டிற்கு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் (1833) காலத்திலிருந்து டொனமூர் (1931) காலம் வரை இனவாரிபிரதிநிதித்துவ முறையையே சிபார்சு செய்தனர். ஆட்சி அதிகாரம் பிரித்தானியரின் கைகளில் இருக்கும் வரை நல்லிணக்கப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.
டொனமூர் யாப்பு ஒற்றையாட்சி நிர்வாகக்கட்டமைப்புக்குள் அரைப்பொறுப்பாட்சியையும் பிரதேசவாரிப்பிரதிநிதித்துவத்தையும் அறிமுகப்படுத்திய போது ஆட்சி அதிகாரம்  இயல்பாகவே சிங்கள சமூகத்திடம் சென்றது. தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக்கட்டமைப்பிலிருந்து  தூக்கி வீசப்பட்டனர். இந்த அபாயத்தை முன்னரே தமிழ்த்தரப்பு வெளிப்படுத்தியிருந்தமையினால் தமிழ் மக்களைத்திருப்திப்படுத்துவதற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பில் சேர்ப்பதாக குறிப்பிட்டனர்.

அதன்படி  நிர்வாகக்குழு முறை, தேசாதிபதியின் ஒதுக்கு அதிகாரங்கள், நியமன உறுப்பினர்கள், பொதுச்சேவை ஆணைக்குழு என்பவை பாதுகாப்பு ஏற்பாடுகளாக சேர்க்கப்பட்டன.
சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்திய போது தமிழ்த்தரப்பு அடையாள அரசியலின் உச்சக் கோரிக்கையாக 50:50 கோரிக்கையை முன்வைத்தது. பிரித்தானிய ஆட்சியாளர் நடைமுறைக்கு பொருந்தாது எனக்கூறி அதனை நிராகரித்தனர். அதற்கு மாற்றாக டொனமூர் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட காப்பீட்டு ஏற்பாடுகளை சற்று உயர் வடிவில் வெளிப்படுத்தி சிறுபான்மையோர் காப்பீடுகள் என ஒரு காப்பீட்டு பொதியை சிபார்சு செய்தனர். அரசியல் யாப்பின் 29 வது பிரிவு , செனற்சபை, நியமன உறுப்பினர்கள், பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள!; கோமறைக்கழகம், அரசியல் யாப்பினை திருத்துவதில் 2ஃ3 பெரும்பான்மை , பொதுச்சேவை, நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் என்பன அந்தப் பொதியில் உள்ளடக்கப்படடிருந்தன.
மறுபக்கத்தில் சோல்பரி யாப்பின் மூலம் முழுமையான பொறுப்பாட்சி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

பெயரளவு அதிகாரங்களை மட்டும் பிரித்தானியா தன்வசம் வைத்துக் கொண்டது. இம்முழுப் பொறுப்பாட்சி முழு ஆட்சி அதிகாரத்தையும் சிங்கள சமூகத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில் தான் தந்தை செல்வா இந்த அபாயத்தை தெளிவாகப்புரிந்து அடையாள அரசியலைக் கைவிட்டு இறைமை அரசியலை முன்னெடுக்க தலைப்பட்டார். தமிழர் தாயகத்தை வடக்கு கிழக்கு என வரையறுத்து அதற்கு இறைமையை வேண்டுகின்ற இறைமை அரசியலை முன்வைத்தார். அவருடைய இறைமை அரசியல் சமஸ்டிக்கோரிக்கையாக வெளிவந்தது. அரசியல் அணுகு முறையையும் மக்களை இணைத்த போராட்ட அரசியலாக மாற்றினார். இதன் பின்னர் இறைமை அரசியலே தமிழ் மக்களின் மைய அரசியலாக மாறியது.


இறைமை அரசியலின் அடுத்த கட்டமாகவே தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை இறைமை அரசியலின் உச்ச கோரிக்கை எனலாம். அரசியல் தளத்தில் இந்தச் சிந்தனையை முதலில் கொண்டு வந்தவர் தமிழரசுக்கட்சியின் மூளை எனக் கருதப்படுகின்ற ஊர்காவற்றுறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் ஆவார். இலக்கியத்தளத்தில் அதனை அடையாளப்படுத்தியவரும் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் தான். மூத்த எழுத்தாளர் மு.தளையசிங்கமே அவராவார். அவரது “ஒரு தனி வீடு” என்ற நாவல் இலக்கிய உலகில் முதன்முதலாக தனிநாட்டுக்கோரிக்கையை வெளிப்படுத்தியது. கட்சி அரசியலும் தேர்தல் அரசியலும் தனிநாட்டுக்கோரிக்கைகை வென்றெடுக்க போதாத போது ஆயுதப்போராட்டம் எழுச்சியடைந்தது.

2009 உடன் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. புவிசார் அரசியலும், பூகோள அரசியலும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சார்பாக இல்லை. 6 வது திருத்தம் இன்னோர் பக்கத்தில் சட்டத்தடையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று தமிழ்மக்கள் “சுயநிர்ணயசமஸ்டி” என்பதனை கோரிக்கையாக முன்வைக்கின்றனர்.
எனவே ரணில் இனப்பிரச்சினையை தீர்க்க போகிறேன் என்று கூறுகின்றார்.  எந்த வகையில் தீர்க்கப் போகின்றார் என்பதை அவர் வெளிப்படுத்துவது அவசியம். முதலில் தமிழ் மக்களின் இறைமை அரசியலை ஏற்றுக் கொண்டுள்ளாரா? என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். ஒரு பக்கத்தில் இணக்க சைகையை காட்டிக்கொண்டு மறுபக்கதில் ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் ஜனாதிபதியை எவ்வாறு நம்புவது என்பது இங்கு முக்கியம்.
தமிழ் மக்களுக்கு அடிப்படைப்பிரச்சினைகள், இன அழிப்புக்கு நீதி கோரும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புப்பிரச்சினைகள், இயல்பு நிலையைக் கொண்டு வரும் பிரச்சினைகள்! அன்றாடப்பிரச்சினைகள் என ஐந்து வகை பிரச்சினைகள் உள்ளன. முதல் இரண்டு பிரச்சினைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்னர் இறுதி மூன்று பிரச்சினைகளையும் தீர்த்து நம்பிக்கையைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்காமலும் ஆக்கரமிப்புக்கள் தொடர்ச்சியாகவும் மேற்கொண்டு வரும் ஒரு ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு இறைமைத்தீர்வை தருவார் என நம்பிக்கை வைப்பதற்கு தமிழ் மக்கள் இன்னமும் முட்டாள்களாகவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews