யாழில் சில பேருரின் பங்கு பெற்றுதலுடன் இடம்பெறும் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மை காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போராட்டங்களில் பத்து அல்லது பதினைந்து பேர் பங்கு பற்றுதலுடன் இடம் பெறுகிறது.
தமிழ் பௌத்தம் இருந்ததற்கான ஆதாரங்களை வைத்து சிங்கள பௌத்தமாக சித்தரித்து விரிவுபடுத்தும் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.
கந்தரோடைப் பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சி நிலையத்தால் தமிழ் பௌத்தம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அதற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாங்கி அதனை பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கியுள்ளார்.
பிக்கு தற்போது குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையை அறியக்கூடியதாக உள்ளது.
யாழ்பாணத்தில் தமிழ் பௌத்தம் கோப்பாய் அச்சுவேலி போன்ற பகுதிகளில் காணப்பட்ட நிலையில் அது எமக்கு பிரச்சனை அல்ல.
தமிழ் பௌத்தம் இருந்ததை காரணமாக வைத்து சிங்கள பௌத்தத்தை திட்டமிட்டு விரிவு படுத்துவதற்கு எடுக்கம் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
பௌத்தர்கள் வாழாத இடத்தில் விகாரை அமைப்பதும் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளை அபகரிப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.
எமது நிலங்களில் விகாரை அமைப்பதற்கு எமது மக்களும் ஒரு விதத்தில் காரணமாக அமைகிறார்கள் ஏனெனில் வெளிநாட்டில் இருப்பவர்கள் சிறிய ஒரு இலாபத்திற்காக தமது அருகில் இருப்பவர்களுக்கு வழங்காமல் வெளியாருக்கு வழங்குகிறார்கள்.
பல வருடங்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் காணிகளை இலக்கு வைத்து இராணுவம் திட்டமிட்ட முறையில் அவர்களை அனுகி அதிக பணம் கொடுத்து பெற்றுக் கொடுப்பதாக அறிகிறேன்.
நான் கந்தரோடையில் வாழ்கிறேன் எனது பகுதி மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கந்தரோடையில் விகாரை அமைப்பது தொடர்பில் அறியாதவர்களாகவே உள்ளனர்.
திட்டமிட்ட பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தும் மக்களுடன் போராட்டங்களை நடாத்தி வரம் நிலையிலும் அதன் செயற்பாடுகள் தமிழர் பகுதிகளில் இடம்பெற்றே வருகின்றன.
இந்நிலையை தடுப்பதற்கு தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து மாற்று வியூகம் ஒன்றை வகுப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
ஆகவே திட்டமிட்ட முறையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகளில் சிங்கள பௌத்தத்தை பரப்புவதற்கும் திணிப்பதற்கும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.