
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் (09/05/2023) திகதி முதல் வரும் 14ம் திகதிவரை தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னேடுக்கவும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை, ஆலடிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்றது. சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு 2009 இல் உச்சத்தை தொட்ட போது முழு உலகமும் சிங்கள வல்லாதிக்கத்துடன் கைகோர்த்து எமது இனம் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படுவதினை வேடிக்கை பார்த்தன.
1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் தமிழர் என்ற இன அடையாளத்துக்காகவே சிங்கள இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டனர். நவாலி தேவாலயம், செஞ்சோலை என இனவழிப்பின் கரங்கள் நீண்டன. 2001ம் ஆண்டு தொடங்கிய சமாதான பேச்சுவார்த்தையின் பின், 2006ம் ஆண்டு எட்டாம் மாதம் தமிழினத்தை அழித்தொழிப்பதற்காக சிங்கள பேரினவாதத்தால் தொடங்கப்பட்ட யுத்தத்தில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மட்டுமன்றி உணவுத்தடை, மருந்துத்தடை கூட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

விடுதலைக்காக உயிரினை துச்சமாக மதித்து களத்தில் நின்ற எமது மக்கள் பட்டினி சாவினை எதிர்கொள்ள கூடாது என்று தமிழர் புனர்வாழ்வு கழகமும், விடுதலை சார்ந்த அமைப்பும் தம்மிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி, அதை மக்களுக்கு வழங்கி, மக்களினை பட்டினி சாவிலிருந்து காத்தனர். எறிகணைகளும் கொத்து குண்டுகளும் எமது மக்களை கொத்து கொத்தாக கொன்ற போதும் பட்டினியால் மக்கள் இறக்கவில்லை. இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று நாம் எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, எமது மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக எமது இளம் சமுதாயத்திற்கு கடத்த வேண்டிய ஒரு கட்டுப்பாடில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் எமது இனவிடுதலையை அடையும் வரை இக்குறியீடு கடத்தப்படும் என உறுதியெடுக்கின்றோம்.
நாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் எல்லா வேறுபாடுகளையும் துறந்து தமிழினமாக எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் மாவட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சிக்கு உரிய அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கி விடுதலைக்கான பயணத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழர் தாயகம் எங்கும் இயங்கும் சமூக கட்டமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், ஆலய நிர்வாகங்கள், சமூக இயக்கங்கள், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள், தனி நபர்களாகவும் கூட்டாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்களை சூழ உள்ளவர்களுக்கு, குறிப்பாக இளையவர்களுக்கு பரிமாறி வரலாற்றையும் எங்கள் இனத்தின் வலிகளையும் தொடராக உலகெங்கும் உள்ள அனைவருக்கும் கடத்துமாறு வேண்டி நிற்கின்றோம்.
இதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின்,சிவில் சமூகத்தினர்,காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்,ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்..
இவ் கஞ்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14.05 அன்று பொத்துவில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.




