
சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை தனியார் ஒருவரிடம் இருந்து மீட்டு மக்களின் பாவனைக்கு வழங்குமாறு அக்கிராம மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை தலைமைக்காரியலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 6.00 மணி முதல் பிரதேச சபையின் பிரதான வாயிலை மறித்து அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள், பாடசாலை மாணவர்கள், முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திலகராணி உட்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியையும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தையும் அபகரித்து தனியார் ஒருவர் அடாத்தாக எல்லை வேலி அமைத்து கிராம மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக குறித்த வீதியை அபகரித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த கிராம மக்கள் 2020 ஆம் ஆண்டு சாவகச்சேரி சாவகச்சேரி பிரதேச சபை, கமநல சேவைகள் திணைகளம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் என்பவற்றில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட திணைக்களங்கள் அவர்களுடைய ஆவணங்களின் அடிப்படையில் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தின் அரைவாசிப் பகுதியும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான 100 மீற்றர் வரையான வீதியும் குறித்த தனி நபரால் எல்லையிடப்பட்டு அபகரிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து சாவகச்சேரி பிரதேச சபை குறித்த வீதியினை கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மக்கள் பாவனைக்காக எல்லையிட்டு திறந்து விட்டிருந்தனர். ஆனால் வீதி திறந்துவிட்ட சில நாள்களிலேயே குறித்த தனிநபரால் மீண்டும் அந்த வீதியும் குளமும் முள்கம்பி வேலியிட்டு அடைக்கப்பட்டது. இதனால் மக்களும் மாணவர்களும் குளத்தினூடாகவே பயணம் செய்யவேண்டிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த வீதியை மீட்டுத்தருமாறு பிரதேச சபையிடம் பலதடவை முறையிட்டும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் இன்று காலை பிரதேச சபையினை முற்றிகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எச்.சீ.ரணசிங்க மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைச் செயலாளர் க.சந்திரகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார்கள்.
இதன்போது குறித்த வீதியை இன்றைய தினமே உடனடியாக மக்கள் பயன்படுத்தக்கூடியதாக மீட்டுத்தந்தால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்வோம் என உறுதியாக தெரிவித்தனர்.
இதன்போது குறித்த வீதியை சுற்றியுள்ள அடைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளை உடனடியாக அகற்றுவதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எச்.சீ.ரணசிங்க தெரிவித்தார்.
இதையடுத்து பிரதேச சபை செயலாளர் உட்பட்ட அதிகாரிகள், கொடிகாமம் பொலிஸார், சாவகச்சேரி பிரதேச செயலர், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதித்குச் சென்றனர்.
பொலிஸாரின் பாதுகாப்போடு வீதியை அபகரித்து போடப்பட்டிருந்த சுமார் 100 மீற்றருக்கும் அதிகமான முட்கம்பி வேலிகளையும் தூண்களையும் அகற்றி அளவீடு செய்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.



