ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மாகாணத்தின் ஆளுநர் பதவி என்பது ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பதவிக்கு சமனானது.
ஆளுநர்களை நியமிப்பது மாற்றுவது ஜனாதிபதியின் அதிகாரமாக காணப்படுகின்ற நிலையில் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களை ஜனாதிபதி ஆளுநர்களாக நியமிக்க வேண்டும்.
வடக்கில் ஆளுநர் மாற்றம் இடம்பெற போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் கடந்த காலங்களில் நிர்வாக முறைகேடுகளில் சிக்கிய ஒருவர் ஆளுநராக வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த நபர் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற தேர்தலை தடுப்பதற்காக தனது பதவியை திடீர் இராஜினாமா செய்து தேர்தலை பிற் போடுவதற்கு பிரதான காரணமாக அமைந்தவர்.
மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தும் தேர்தலுக்கு மதிப்பளிக்காமல் சுக போங்களுக்காக விலை போபவர்கள் எவ்வாறு மக்கள் பணி செய்வார்கள் .
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான தேவைகள் நிர்வாக ரீதியான உதவிகளை சலுகைகளுக்கு விலை போகாத ஆளுநரால் மட்டுமே செய்ய முடியும்.
ஆகவே ஆளுநர்களை மாற்றும் போது மக்களுக்காக சேவை செய்யக்கூடிய ஊழல் முறைகேடுகளுடன் தொடர்பு அற்றவர்களை ஆளுநராக மாகாணங்களுக்கு நியமிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.