
காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஐவர், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினுள் நுழைந்து அங்கிருக்கும் இரும்பு பாகங்களை திருடிச் செல்ல முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவலாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரும்பினை ஏற்றிச் செல்வதற்கு முற்பட்ட வாகனமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில், சான்றுப் பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.