
அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு அனைத்து அமைச்சுகளும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
முடங்கிப்போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் முதல் அரசாங்க அதிகாரிகள் வரையில் அனைவரும் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள முடியுமெனவும், நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமெனில் அமைச்சரவை செயலாளர்கள் அமைச்சுகளுக்கு கீழுள்ள நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மாறாக அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.