நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் நேற்றைய தினமும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவணி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடந்த 12ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஊர்திப் பவணியானது, இன்றைய தினம் கிளிநொச்சி பரந்தன் ஊடாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது.