
நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த 30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
காணாமல் போன நபர் கடலில்
சுமார் எண்பது அடி ஆழத்தில் ஒட்சிசன் சிலிண்டருடன் சென்று அட்டைகளை பிடித்துவந்து படகில் வைத்துவிட்டு இரண்டாவது ஒட்சிசன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு மீண்டும் கடலிற்க்கடியில் அட்டை பிடிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கடலிற்க்கு அடியிலிருந்து மேலை வராதமையால் படகை ஓட்டிச் சென்றவர் அவருடன் இணைக்கப்பட்ட கயிற்றை மேலே இழுத்துள்ளார். குறித்த நபர் இன்றி கடலட்டையும் கயிறுமே மேலே வந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த தொழிலில் ஈடுபடுத்தும் முதலாளிக்கு அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் நூறு படகுளில் கடற்படையும் இணைந்து குறித்த ஆழ்கடல் பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ள நிலையிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நேற்றும் நூறு படகுகளிலும் இன்றும் எழுபது படகுகளிலும் சென்று தேடுதல்கள் இடம் பெறுகின்ற போதிலும் குறித்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறித்த கடலட்டை தொழிலில் ஈடுபடுத்தும் முதலாளி எமக்கு தெரிவித்ததுடன் இது தொடர்பில் பருத்தித்துறை போலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்ததுடன் தற்போது அதிவேகமா காற்று வீசிக்கொண்டிருப்தனால் தேடுதல் பணிகளில் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் கடற்படையின் ஏழு வரையான இயந்திரப் படகுகள் தம்முடன் இணைந்து 24 மணி நேரமும் தேடுதலில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.