கடந்த 70 வருடமாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு அரசியல் தீர்வு இன்று வரை எட்டாக்கனியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை என அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தன்னாமுனையிலுள்ள மியாமி மண்டபத்தில் மக்கள் பிரகடனம் எனும் தொனிப் பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இளைஞர்; யவதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவூட்டும் பயிற்சி பட்டறை ஆரம்பித்து வைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பு கடந்த 70 வருடமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு அரசியல் தீர்வை கோரிவருகின்றது.
இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக முன்னெடுப்பதற்காக கடந்த வருடம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கோரிக்கையை மையப்படுத்தி 100 நாள் செயற்திட்டத்தை செய்திருந்தோம்.
அதன் இறுதி நாளான நவம்பர் 8ம் திகதி இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கினைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வை பிரகடனப்படுத்தியுள்ளோம்.
அதனை மக்கள் பிரகடனத்தை பலப்படுத்துவதற்காக தெற்கிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதற்காக முதல் கட்டமாக இலங்கையில் இருக்கின்ற 13 தூதுவராலயங்களுக்கு மற்றும் ஜ.நாடுகள் சபை அலுவலகம் ஜரோப்பிய யூனியன் காரியாலயத்துக்கு சென்று இதன் முக்கியத்துவம் மற்றும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கட்டாயம் அரசியல் தீர்வு தேவை என வலியுறுத்தி பரிந்துரைத்தோம்.
அதிகார பகிர்வு கருத்துருவாகம் கட்டாயம் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற விடையங்களை தெளிவுபடுத்தி வருகின்றோம். இது மக்கள் மயப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில்தான் தேசிய ரீதியாக சர்வதேச ரீதியாக பலம் பொருந்தியதாக இருக்கும்
இதற்கமைய திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று மட்டக்களப்பில் மேற்கொண்டு வருகின்றோம். தற்காலத்தில் சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு பொருத்தமானதாக இருக்கும் எனவே ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கினைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தவிர வேறு இருக்கமுடியாது என்பது எங்கள் கருத்தாகும் என்றார்