தனது 12 வயதில் தந்தையை கொலை செய்தவரை பழிதீர்ப்பதற்காக ஏழு வருடங்களாக காத்திருந்த சிறுவன் ஒருவன் ஏழு வருடங்களின் பின்னர் கொலைசெய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணைடைந்த சம்பவ மொன்று அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை, சூச்சி கிராமத்தில் கடந்த 21 ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் 35 வயதான ஒரு பிள்ளையின் தந்தையொருவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இவர் இரண்டு கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவி மற்றும் நான்கு வயது பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்தபோது குடும்பஸ்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், 19 வயதான இளைஞரொருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி சரணடைந்துள்ளார். சூச்சி கிராமத்தில் குடும்பஸ்தரை தானே கொன்றதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நீண்ட நேர வாக்குமூலத்தில் பொலிஸாரிடம் அவர் அதிர்ச்சியான தகவலொன்றை வெளியிட்டுள்ளார். தானும் தனது தந்தையும் கடந்த 2016 ஆம் ஆண்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்றுகொண்டிருந்தபோது நபரொருவர் தந்தை மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி கொலைசெய்ததாகவும் அப்போது தனக்கு 12 வயதெனவும் கூறியுள்ளார்.
அந்தச் சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையிலேயே 07 வருடங்கள் காத்திருந்து கொலையாளி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்கு மூலத்தைப் பதிவுசெய்த பொலிஸார் சந்தேக நபரான 19 வயது இளைஞரை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதுடன் எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஓஷத மீகார மஹஆராச்சி உத்தரவிட்டுள்ளார்.