பணவீக்கத்தில் மிகவேகமான வீழ்ச்சியால் வைப்புகள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 13 மற்றும் 14 சதவீதமாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நாணய சபைக் கூட்டத்தில் துணை நில் வைப்பு வசதிவீதம், துணை நில் கடன் வசதி வீதம் ஆகிய கொள்கை வட்டி வீதங்களை 250 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 13 சதவீதமாக வும், 14 சதவீதமாகவும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் பணவீக்கமானது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளின் சாதகமான போக்கின் விளைவாகவுமே நாணய சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அவசியமான நடவடிக்கைகள் மூலம் இவ்வருட இறுதிக்குள் பணவீக்கத்தை ஓர் இலக்கப் பெறுமதிக்குக் கொண்டுவரமுடியும்’ என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.