யாழ்.வடமராட்சி – துன்னாலை பகுதியில் மாடு பிடிப்பதுபோல் கழுத்தில் கயிற்றினால் சுருக்கு போட்டு நிலத்தில் இழுத்து வீழ்த்தி அணிந்திருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துன்னாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த து.மாசிலாமணி என்ற வயோதிப பெண்மணியே ஒரு சோடி வளையலை இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அயலில் உள்ள வளவில் மேய்வதற்காக கட்டின தனது மாட்டினை பார்க்கச் சென்றுள்ளார்.
இதே சமயம் இந்த வயோதிபப் பெண்ணை பின்தொடர்ந்த திருடன் மாங்காய் கிடைக்குமா எனக் கேட்டுக் கொண்டு கயிற்றை கழுத்தில் போட்டு உருவி நிலத்தில் இழுத்து விழுத்தியதும் வயோதிபப் பெண்மணி மயங்கியுள்ளார்.
இதனையடுத்து நகைகளை கழட்டிக் கொண்டு திருடன் தலைமறைவாகியுள்ளான். மயக்கம் தெளிந்ததும் சத்தம்போட அயலவர்கள் ஓடி வந்து வயோதிபப் பெண்மணியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தப் பகுதியில் கால்நடைகளில் இருந்து வீட்டுப் பொருள்கள் வரை சமீப காலமாக களவுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.