யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலப்பத்தை துப்பாக்கி முனையில் பொலிஸார் அச்சுறுத்தியபொழுது, பிரசன்னமாகியிருந்து அதனை ஒலிப்பதிவு செய்த மற்றும் முதலில் அதைக் கண்ட இரண்டு நபர்களை பொலிஸார் பொய்யான வழக்குகளில் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தார்கள்.
பொலிஸாரின் அதிகாரம் அவர்கள் சார்பாகத் தற்சமயம் முன்னிலையாகி, அவர்களைப் பிணையில் வெளியில் கொண்டு வந்துள்ளோம். நீதிமன்றத்திற்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அதாவது சட்டத்தை மீறியது பொலிஸாரே தவிரத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது கைது செய்யப்பட்ட நபர்களோ இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஏனென்றால் பரீட்சை ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில், பாதுகாப்பு அலுவலர்களுக்கு அல்லது காவலர்களுக்கு அறிவித்து பாடசாலை வளாகத்தினுள்ளே வெளியாட்கள் பிரவேசிப்பதை மட்டுப்படுத்துவதற்குத் தான் பொலிஸாருக்கு அதிகாரம் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.