காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று காலை (07.06.2023) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அந்த மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த வழக்கை வேறொரு திகதியில் மீள அழைக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, வழக்கை ஜூலை 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.