கோட்டாபய ஆட்சிக்காலத்தைப் போன்றே ரணிலின் ஆட்சியிலும் செல்வந்தர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்நாட்டின் மிகப் பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளை வழங்கி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வழியை அச்சொட்டாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றார். மின்சார பட்டியல் மறுசீரமைப்பில் சாதாரண பொதுமக்கள் குறித்து எதுவித அக்கறையும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை என்பது தௌிவாகி விட்டது.
நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற தரப்புகளை தற்போதைய ஜனாதிபதியும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்.
அவ்வாறான துர்க்குணம் கொண்ட அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஒன்றிணைய மாட்டாது. அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒரு சில ஊடகங்களைக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஊடகப்பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.
ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கொள்ளவுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் பட்டம், பதவி, வரப்பிரசாதங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இந்நாட்டின் பொதுமக்களை காட்டிக் கொடுக்க மாட்டாது.
ஜனாதிபதியை அந்தப் பதவியில் உட்கார வைத்த மொட்டுக் கட்சிக்காரர்கள், தற்போது அவரிடம் வந்து அமைச்சுப் பதவிகளை கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்.
அது ஒரு சூதாட்டம் போன்று மாறிவிட்டது. இந்த நாடகங்கள் எல்லாம் இன்னும் ஒன்றரை வருடங்கள் வரை மட்டுமே என தெரிவித்துள்ளார்.