குருந்தூர் மலை விகாரையின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு

குருந்தூர் மலை விகாரையின் காணிகள் யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு உரித்தான அரச காணிகள் வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்று எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வினா தொடுத்திருந்தார்.

குருந்தூர் மலை விகாரை தொடர்பில் கடந்த 08ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடுத்து எல்லாவல மேதானந்த தேரர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

குருந்தூர்மலை விகாரைக்கு உரித்தற்ற காணிகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், குறித்த விகாரையின் துணை விகார கூடங்கள் அப்பகுதியில் பரவிக் காணப்படுவதாகவும், அவ்வாறான நிலையில் குறித்த காணிகளை பகிர்ந்தளிப்பது பொருத்தமற்றது என்றும் எல்லாவல மேதானந்த தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், குருந்தூர்மலை விகாரை என்பது இலங்கையின் முக்கிய தொல்பொருள் முக்கியத்துவம் கொண்ட இடம் என்றும், அந்த விகாரைக்கு சொந்தமான காணிகளை வேறு தரப்புக்கு பகிர்ந்தளிக்கப்பட தீர்மானிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

மேலும், வடக்கு மற்றும் கிழக்கின் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக 1985ம் ஆண்டளவில் வனப் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட இடங்களை தொடர்ந்தும் அதே நிலையில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தனது கடிதத்தில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர் மலை விகாரைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உதயகம்மன்பில எம்.பி. அறிவித்துள்ளார்.

குருந்தூர் மலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்பதை நிரூபிக்கும் வகையிலேயே தனது கட்சியின் முக்கிய பிரதிநிதிகளுடன் தான் அங்கு விஜயம் மேற்கொண்டு,உண்மைகளை பகிரங்கப்படுத்தவுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews