
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) 16.06.2023 காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை பிரகடனப்படுத்தி வைத்தார். நூற்றாண்டு நினைவு சின்னமும் அவரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும், ஏனைய விருந்தினர்களாக கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம் மற்றும் யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர் திரு முத்து இராதாகிருஷ்ணன், யாழ். மாநகர முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

1923 ஆம் ஆண்டு சேர் பொன் இராமநாதன் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் கல்வி வரலாற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இக்கலாசாலையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
