உலக அரசியலானது, 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஆசிய மீதே அதிக கவனத்தை பதித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் மிகமுக்கியமான அமெரிக்காவின் மூலோபாயவாதியான அல்பிரட் தயார் மாகனுடைய குறிப்புகளின் பிரகாரம் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதினை உலக அரசியலின் போக்குகளும் உறுதி செய்கின்றது. குறிப்பாக ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் (IISS) ஏற்பாட்டில் சிங்கப்பூரில் இடம்பெற்ற 20வது ஆசிய-பசிபிக் பாதுகாப்பு மன்றமான ஷங்ரி-லா உரையாடலில் (Shangri-La Dialogue-2023), அமெரிக்க மற்றும் சீன பாதுகாப்பு தலைவர்களின் உரைகள் அதிகம் ஆசியாவை மையப்படுத்திய புதிய இராணுவ மோதலுக்கான தொனியில் காணப்பட்டதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பார்வையை பெற்றுள்ளது. இந்நிலையில் இக்கட்டுரை ஷங்ரி-லா கலந்துரையாடலில் அமெரிக்க-சீன பாதுகாப்பு தலைவர்களின் உரைகளின் மோதல் உள்ளடக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மாறிவரும் மூலோபாயப் போக்குகளை ஜூன் முதல்வாரத்தில் சிங்கப்பூரில் அதன் 20வது பதிப்பை முடித்துக்கொண்ட வருடாந்திர ஷங்ரி-லா உரையாடல் வெளிப்படுத்தியுள்ளது. 2002இல் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தினால் முதன்முதலில் கூட்டப்பட்டதிலிருந்து, ஷங்ரி-லா உரையாடல் ஆனது ஆசியாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் பிராந்திய பாதுகாப்பு குறித்த தங்கள் நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தவும், இருதரப்பு மற்றும் சிறுதரப்பு பாதுகாப்பு இராஜதந்திரத்தை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தவும் கூடும் அடிப்படை மன்றமாக மாறியுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் பிராந்தியத்தின் உளவுத்துறை தலைவர்களிடையே அமைதியான ஆலோசனைகளுக்கான இடமாகவும் மாறியுள்ளது. இந்த ஆண்டு மாநாட்டில் பங்கேற்றவர்களில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் சீனாவின் பாதுகாப்பு மந்திரி லி ஷாங் பு ஆகியோரின் பிரசன்னமும் நடாத்தையும் சர்வதேச அரசியல் ஆய்வின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் பாதுகாப்பு மந்திரி லி மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சரான பிறகு, அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் முதல் களமாக ஷங்ரி-லா உரையாடல் அமைந்தது. குறிப்பாக அமெரிக்க மற்றும் சீன பாதுகாப்பு தலைவர்கள் சந்திக்கும் சில இடங்களில் முதன்மையான ஒன்றாக ஷங்ரி-லா உரையாடலும் காணப்படுகின்றது. வாஷிங்டனின் இராணுவ ஆதரவு மற்றும் தற்காப்பு ஆயுதங்களை தைவானுக்கு விற்பது, போட்டியிட்ட தென் சீனக் கடலுக்கு சீனாவின் இறையாண்மையை வலியுறுத்துவது மற்றும் அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிடுவது குறித்து இருதரப்புக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நேரத்தில், இந்த ஆண்டு ஷங்ரி-லா உரையாடலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஆழமடைந்து வரும் பதட்டங்களையே எடுத்துக்காட்டுகிறது.
முதலவாது, அமெரிக்க மற்றும் சீனா பாதுகாப்பு தலைவர்களின் உரைகள் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் இருதரப்பு மோதல்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஜூன்-03அன்று, தென் சீனக் கடலில் சீனா ஆபத்தான வான்வழி இடைமறிப்புகளை நடத்துவதை விமர்சித்தார் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அச்சுறுத்தும் நடத்தையால் வாஷிங்டன் தடுக்கப்படாது என்று எச்சரித்தார். ‘சர்வதேச வான்வெளியில் சட்டப்பூர்வமாக பறக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் விமானங்களை ஆபத்தான எண்ணிக்கையிலான இடைமறிப்புகளை சீனா நடத்தி வருகிறது. நாங்கள் மோதலையோ மோதலையோ நாடவில்லை, ஆனால் கொடுமைப்படுத்துதல் அல்லது வற்புறுத்தலுக்கு முகம் கொடுக்க மாட்டோம்’ என்று சிங்கப்பூரில் நடந்த ஷங்ரி-லா உரையாடலில் ஆஸ்டின் கூறினார். மறுவலமாக சீன உயர்மட்ட இராணுவ அமைப்பான மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையின் துணைத் தலைவர் ஜெனரல் ஜிங் ஜியான் பெங், தகவல்தொடர்பு முறிவுக்கு அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளதுடன் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு வாஷிங்டனின் பக்கம் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் ஷங்ரி-லா உரையாடலிற்கு பதிலளிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். ‘அமெரிக்கா ஒருபுறம் தகவல்தொடர்பு மற்றும் பரிமாற்றங்களுக்கு அழைப்பு விடுத்து. மறுபுறம் சீனாவின் நலன்களையும் கவலைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும் ஒருபுறம் நெருக்கடியின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகக் கூறுகிறது. மறுபுறம் கடுமையாக செயல்படுகிறது மற்றும் ஆத்திரமூட்டலைக் காட்டுகிறது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தைப் பிரசங்கிப்பதன் சாராம்சம் ஒரு மேலாதிக்கமாக அதன் நிலையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கு உதவுகிறது. மூலோபாய சுயாட்சியை நிலைநிறுத்தும் மற்றும் அமைதி மற்றும் வளர்ச்சியை நாடும் நாடுகள் அமெரிக்காவை கண்மூடித்தனமாக பின்பற்றாது என்று நாங்கள் நம்புகிறோம்.’ எனத்தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா-சீனா இடையிலான பதட்டத்தை மேலும் உறுதி செய்யும் மற்றும் அதிகரிக்கும் நிகழ்வாகவே அமைகின்றது.
இரண்டாவது, ஆசியா-பசிபிக் பகுதியில் செல்வாக்கு பெற அமெரிக்கா, சீன பாதுகாப்பு அதிகாரிகள் முயல்கின்றனர். அமெரிக்காவும் சீனாவும் ஆசிய-பசிபிக் நாடுகளுடன் புதிய கூட்டாண்மைகளை நிறுவுவதற்கும் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் போட்டியிடுவதால், இரு நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஷங்ரி-லா பாதுகாப்பு மன்றத்தில் தங்கள் பிராந்திய சகாக்கள், இராஜதந்திரிகள் மற்றும் தலைவர்களின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆஸ்டின் ஜூன்-03அன்று, ‘இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க தலைமை’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளதுடன், ஜூன்-04அன்று லி ‘புதிய பாதுகாப்பு முயற்சிகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்றியுள்ளார். இரு பாதுகாப்பு தலைவர்களும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பின் தலைமை சக்தியாக தங்களை அடையாளப்படுத்துவதனையே உரைகளின் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சீனாவின் புதிய பாதுகாப்பு முன்முயற்சிகள்’ என்ற தலைப்பில் லீயின் முழுமையான உரையில், 2022இல் சீன தலைவர் ஷி ஜின்பிங்கால் முன்மொழியப்பட்ட உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சீனா 21ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்கங்களில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதாக முன்மொழியப்பட்ட பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை (BRI) பிரச்சாரப்படுத்தியது போலவே மூன்றாவது தசாப்தத்தில் இராணுவ பாதுகாப்பை மையப்படுத்தி உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சிகளை (GSI) பிரதான உத்தியாக முன்னிறுத்த சீனா தயாராகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதேவளை சிங்கப்பூரில் நடைபெறும் மாநாட்டின் ஒருபுறம், ஆஸ்டின் ஆசியான் மையத்தில் நங்கூரமிடப்பட்ட இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பற்றிய தங்கள் பகிரப்பட்ட பார்வைக்கு ஆதரவாக பிராந்தியம் முழுவதும் அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மைகளை முன்னேற்றுவதற்கான முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
மூன்றாவது, அமெரிக்க-சீன பாதுகாப்பு தலைவர்களின் பேச்சுவார்த்தை நிராகரிப்புக்கள் இரு தரப்பு உறவின் எதிர்கால ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. ‘போட்டி மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே திறந்த இராணுவ-இராணுவத் தொடர்புகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை திணைக்களம் உறுதியாக நம்புகிறது’ என்று ஆஸ்டின் லியை சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு கேட்டுக் கொண்டார். ஆனால் சீனா அந்த கோரிக்கையை நிராகரித்தது. ஜெனரல் லி, ரஷ்சியாவில் இருந்து போர் விமானங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சீனா வாங்கியதில் லி ஈடுபட்டதால் 2018 இல் விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகளின் கீழ் உள்ளார். எனினும் தடைகளை கடந்து அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையில் உள்ள சந்தேகங்களினாலேயே பேச்சுவார்த்தைகள் நிராகரிக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கெஃபேய் கூறுகையில், ‘ஆஸ்டினின் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் அமெரிக்கா சீனாவின் கவலைகளைப் புறக்கணித்து செயற்கையான தடைகளை உருவாக்குகிறது. அமெரிக்க தரப்பு நேர்மை மற்றும் தவறுகளை சரிசெய்வதற்கு நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்பு மற்றும் பரிமாற்றத்திற்கு தேவையான சூழ்நிலைகள் மற்றும் சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்’ எனக்குறிப்பிட்டுள்ளார். லியின் நியமனத்திற்கு முன்பே, முக்கிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுக்களுக்கான பல பாதுகாப்புத் துறை கோரிக்கைகள் சீனாவால் நிராகரிக்கப்பட்டன. 2021 முதல் சீன-அமெரிக்க பாதுகாப்பு துறை சந்திப்பு கோரிக்கைகள் பலவும் பதிலளிக்கப்படவில்லை அல்லது நிராகரிக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. இது சீனா-அமெரிக்க உறவு பாதுகாப்பு துறையில் முரண்பாட்டை உருவாக்கும் சமிக்ஞைகளை அடையாளப்படுத்துகின்றது.
எனவே, ஷங்ரி-லா உரையாடலில் அமெரிக்கா மற்றும் சீனா பாதுகாப்பு தலைவர்களின் உரைகளும் நடத்தைகளும் இரு நாட்டு இராணுவ மோதலுக்கான முன்னாயர்த்த அடையாளப்படுத்தல்களையே வழங்குகின்றது. குறிப்பாக பேச்சுவார்த்தை நிராகரிப்பு தொடக்கம், கூட்டணிகள் உருவாக்க முயற்சிகளும், ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பின் தலைமைக்கான பிரச்சாரங்களும் இரு நாட்டின் பாதுகாப்புத்துறையின் உள்ளார்ந்த போட்டியை பொது அரங்கிற்கு கொண்டு வந்துள்ளது. எனினும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் ஒரு கூறான ‘தென்கிழக்கு ஆசிய சங்கம் வாஷிங்டன் அல்லது பெய்ஜிங் இடையே தேர்வு செய்ய விரும்பவில்லை. ஏனெனில் ஆசியானில் யாரும் புதிய பனிப்போரைக் காண விரும்பவில்லை’ என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்துவதனை ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுமையாக பேணுமாயின் ஆசிய-பசுபிக் பிராந்திய இருப்பும் வளர்ந்துவரும் பொருளாதாரமும் உறுதி செய்யப்படும். மறுதலையாக அமெரிக்க-சீன பனிப்போரை ஆசிய-பசுபிக் பிராந்தியம் தொடர்ச்சியாக அனுமதிக்குமாயின் வளர்ந்துவரும் இருதரப்பு இராணுவ மோதலையும் ஆசிய-பசுபிக் பிராந்தியம் எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகும்.