இந்தியாவை நோக்கிய ஈழத்தமிழரது கோரிக்கைகளும்; இலங்கைத் தீவு பொறுத்து இந்திய அரசியலும்

புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இல்லாதநிலை நீடிக்கிறதாகவே தெரிகிறது. சென்னை ஈழத்தமிழர் சார்ந்து தீர்மானங்களை எடுக்கும் போதெல்லாம் இந்தியா எடுப்பதாக கருத முடியாது. சென்னைக்கும் புதுடில்லிக்குமான உறவின் தன்மை பொறுத்து ஈழத்தமிழருக்கும் புதுடில்லிக்குமான உறவு அமையும். சென்னையின் ஆளும் தரப்பு எடுக்கும் முடிவுக்கும் தமிழகத்தின் முடிபுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எப்போதும் உண்டு. தமிழகம் ஈழத்தமிழருக்கு ஆதரவானது என்பதில் வேறுபட்ட கருத்து இல்லாத போதும் தமிழக ஆளும் தரப்பு புதுடில்லியுடன் கொண்டுள்ள உறவின் தன்மை ஈழத்தமிழரைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். கொழும்பு புதுடில்லியுடன் கொண்டுள்ள உறவுக்கும் சென்னையுடனான உறவுக்கும் இடையில் அதிக வேறுபாடு உண்டு. இத்தகைய அனைத்துவகை உறவிலும் ஈழத்தமிழரது இருப்பின் போக்கினைத் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

ஒரு நாட்டினுடைய வெளியுறவில் பல காரணிகள் ஆதிக்கம் செலுத்தினாலும் மக்களுக்கும் மக்களுக்குமான உறவு முக்கியமானதாக காணப்படுகிறது. அது ஈழத்தமிழருக்கும் தமிழகத்திற்கும் உண்டு. ஏனைய மாநிலங்களைவிட தமிழகம் அதிக கலாசார உறவு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் ஈழத்தமிழரோடு வலிமையானதாக உள்ளது. தென் இலங்கைக்கு அத்தகைய உறவு இல்லாத நிலையிலும் மத்திய அரசின் அதிகார மையத்தோடு வைத்துள்ள உறவினால் அதனை சரிசெய்ய முயலுகிறது. அது அதிகார உறவாகவே அமைந்துள்ளது. ஆனால் பௌத்தமதம் சார்ந்த உறவு கொழும்புக்கும் புதுடில்லிக்கும் பலமானதாக மாறிவருகிறது. அது ஏனைய மாநிலங்களிலும் பரவலடைய முயலுகிறது. இத்தகைய நிலையிலேயே ஈழத்தமிழரது இரு கோரிக்கைகள் இந்தியப் பிரதமரை நோக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சாந்தனின் நாடு திரும்புவது தொடர்பில் அவரது தாயார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விடுதலை செய்யப்பட்டும் என்னும் நாடு திரும்பவில்லை என குறிப்பிட்டு அதற்கு ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு, வடக்கு கடற்றொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமரிடம் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துடனான சந்திப்பின் போது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்திய மீனவர் மீதான மீன்பிடித் தடை 15.06.2023 உடன் நிலைவடைவதனால் இந்திய மீனவர்களது அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இத்தகைய இரு கோரிக்கைகளினதும் முடிபுகளை புதுடில்லி அணுகும் என்பதில் முன்கூட்டியே விளங்கிக் கொள்ள ஈழத்தமிழர்களுக்கு அதிக தேடல் தேவையில்லை. அத்தகைய அனுபவம் கடந்த காலத்தில் அதிகமுண்டு. இந்தியாவை மீறி ஈழத்தமிழர் செயல்பட முடியாத புவிசார் அரசியலுக்குள் அகப்பட்டுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதாவது ஈழத்தமிழருக்கு ஏதும் மாற்றம் நிகழவேண்டுமாயின் அதனை இந்தியாவே நிகழ்த்த முடியும். அவ்வாறே தற்போதைய சூழலை நீடிக்க வேண்டுமாயின் அதனையும் இந்தியாவே மேற்கொள்ள முடியும். அப்படியானால் ஈழத்தமிழர் இருப்பில் இந்தியா அதிக முடிபுகளை எடுக்கும் நிலையை கொண்டுள்ள நாடு என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டம் இந்தியாவின் முடிபுகளை நிராகரித்தது. அதன் விளைவுகளை ஆயுதப் போராட்டங்கள் மட்டுமல்ல ஈழத்தமிழரும் எதிர்கொண்டனர். அதற்கு பின்னால் தென் இலங்கையின் அரசியல் தந்திரம் காரணமாக அமைந்திருந்தது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக உணவுப் பொட்டலங்களை வீசிய இந்தியா விமானங்கள் தாக்குதலை நிகழ்த்தியதென்பது தென் இலங்கை அரசியலால் எழுந்த மாற்றமாகும். இதுவே கொழும்பு -புதுடில்லி உறவின் வடிவமாகும். அத்தகைய அரசியல் நீடிகிறது. அரசற்ற சமூகமான ஈழத்தமிழர் தென் இலங்கைக்கு நிகராக மட்டுமல்ல அதற்கான அடிப்படை அரசியலைக் கூட மேற்கொள்ள முடியாதுள்ளனர். புதுடில்லிக்கும் -ஈழத்தமிருக்குமான உறவை விரிவாக புரிதல் அவசியமானது.

ஒன்று, 2009 போர் முடிவடைந்த காலத்தில் ஜெனீவா தீர்மானம் முதல் ஆறுகட்சி தீர்மானம் வரை பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய கோரிக்கைகளுக்கு எத்தகைய பதிலும் கிடைத்ததாக இல்லை. கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு:களும் நடவடிக்கைகளும் அதிகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கோரிக்கைகள் புதுடில்லியிடம் வைக்கப்பட்டது. சமகாலத்தில் அன்றாடப் பிரச்சினைக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைக்கும் கோரிக்கைகள் இந்தியாவை நோக்கி கோரிக்கை வைக்க வேண்டிய நிலைக்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் இயலாமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஈழத்தமிழர் அரசியல் வங்குரோத்து நிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது. விடுதலை செய்யப்பட்ட சாந்தனையும், இரு தமிழ் மீனவர்களது முரண்பாட்டையும் பேசி தீர்க்க முடியாத ஈழத்தமிழர் அரசியலே இத்தகைய நிலைக்கு காரணமாக தெரிகிறது.

இரண்டு, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் விடுதலைப்புலிகள் தொடர்புபட்டதன் விளைவாக அத்தகைய அரசியல் நகர்த்தப்படுள்ளதா என்ற கேள்வியும் உண்டு. காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையில் வேறுபாடுகாண முயலும் சக்திகளுக்கு தற்போதைய நடைமுறை தெளிவான புரிதலைத் தந்துள்ளது. அரசின் கொள்கைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் அடிப்படையில் அதிக வேறுபாடு இல்லாதது போல் கட்சிகளை மையப்படுத்திய அரசாங்கங்களுக் கிடையிலான கொள்கையில் பாரிய வேறுபாடு தென்படுவதில்லை. அதற்கு வலுவான காரணி பணிக்குழுவினரது ஆதிககமாகும். பணிக்குழுவினர் எடுக்கும் தீர்மானங்களுக்கு அரசாங்கங்கள் இணங்கிச் செயல்படும் தன்மையாகும். அதிலும் இந்திய வெளியுறவு என்பது பாரதீய ஜனதாக்கட்சிக்கும் காங்கிரஸ்கட்சிக்கும் அடிப்படையில் ஒன்றாகவே உள்ளது. சிறிய மாற்றங்களை சூழலுக்கு அமைவாக அரசாங்கங்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய சிறிய மாற்றங்களை தமக்கு இசைவாக ஆக்கும் திறன் ஈழத்தமிழர் அரசியலுக்கு இல்லை என்றே தெரிகிறது. இந்தியப் பிரதமரது யாழ்ப்பான விஜயம், இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுறவுச் சமஷ்டி பற்றிய உரை போன்ற எவற்றையும் தமிழ் தரப்பு அரசியல் வாய்ப்புக்களாக கையாளவில்லை.

மூன்று, தமிழக-ஈழத்தமிழ் மீனவர்களுக்கிடையிலான முரண்பாட்டை சுமூகமாக தீர்க்கும் முயற்சிகளை தமிழ் அரசியல் தரப்பு முதன்மைப்படுத்தவில்லை. மாறாக அதனை ஒரு தேர்தல் அரசியலுக்கான உத்தியாக கருதி அதற்கு தீனிபோட ஆரம்பித்தது. அதனால் முரண்பாட வளர்ந்ததே அன்றி சுமூகமாகவில்லை. தற்போது எந்த தரப்பின் ஒத்துழைப்பும் இன்றி தனித்து சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான முயற்சிகளால் தமிழக மீனவசங்கங்களையும் ஈழத்தமிழ் மீனவ சங்கங்களையும் ஒன்றிணைத்து உரையாடுவதன் மூலம் தீர்வை நோக்கி நகர முடியும். அதனை மேற்கொள்ள முயலும் போது சிவில் அமைப்புளையும் ஒன்றிணைத்துக் கொண்டு சங்கங்கள் செயல்பட முடியும். அதற்கான சூழல் ஒன்றினை உருவாக்கி தமிழக-கேரளா மீனவ சங்கங்கள் கடந்த காலத்தில் தமக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்த்துள்ளன. அத்தகைய அணுகுமுறை சாத்தியமாகவே தெரிகிறது. ஏனெனில் தனது நாட்டுக்குள் நிலவிய மீனவர் முரண்பாட்டையே தீர்க்க முனையாத மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தை கையாளுமே அன்றி தீர்வை நோக்கி நகர்த்தாது என்பதை கவனத்தில் கொள்வது பொருத்தமானது. இந்திய மத்திய அரசாங்கம் தீர்க்க முயன்றாலும் அதன் கட்சி அரசியல் வாய்ப்புக்களை கையாளவே முனையும். தீர்வுகளை வழங்காது.

நான்கு, 2009 க்கு பின்னான ஈழத்தமிழரது அரசியலில் மிதவாதமே தனித்தன்மை வாய்ந்தது. அது மிகப்பலவீனமானது என்ற குற்றச்சாட்டு நியாயமானது. ஆனால் இந்தியா தென் இலங்கையுடன் அதிக ஒத்துழைப்பினை முதன்மைப்படுத்தவே விரும்புகிறது. இந்தியாவுக்கு இலங்கைத் தீவு முழுமையான நலனுக்கானதாகவே கருதுகிறது. வடக்கு கிழக்கு தமிழர் என்ற நிலையை கடந்து இலங்கைத் தீவின் புவியியல் பரப்பு முழுவதும் அதன் நலனுக்கானது என்ற அடிப்படையிலேயே அணுகுகிறது. மீனவ சங்கங்கள் இந்தியாவுக்கு முன்வைத்த கோரிக்கையில் சீன இறால் பண்ணைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டுள்ளது. அது ஒர் அரசியல் வியூகமாக ஈழத்தமிழர் பயன்படுத்த முனைகின்றனர். அது இந்தியாவிடம் முதன்மைப்படுவதாக தெரியவில்லை. அதனை இந்திய தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறதே அன்றி ஈழத்தமிழர் முன்வைப்பதை ஏற்க மறுக்கிறது. அது இந்திய தேசிய நலன்சார்ந்தது என்ற அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை தென்படுகிறது. அது மட்டுமன்றி இந்திய-சீன உறவு பொருளாதாரமாக பலமடையும் போது கூட்டுத்தன்மை சாத்தியமாக வாய்ப்புள்ளது. இந்தியா-ரஷ்சிய-சீனா கூட்டுப் பற்றிய உரையாடல் வலுவடையுமாயின் ஈழத்தமிழரது சீன எதிர்ப்பு அரசியல் காலவதியாகும். இதன் விளைவு சீன-இந்திய எதிர்ப்பு அரசியலை ஈழத்தமிழர் கைவிட வேண்டும் என்பதாகும். ஒட்டுமொத்தத்தில் பிராந்திய, உலகளாவிய சக்திகளுடன் சுமூக உறவை பேணுவதே ஈழத்தமிழரின் இருப்புக்கு பொருத்தமானது.

எனவே, ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவை சென்னைக்குள்ளால் புதுடில்லிக்கும் மற்றும் நேரடியாக புதுடில்லிக்குமான இரட்டைத் தன்மை கொண்ட அணுகுமுறை அவசியமானது. இதில் ஒன்றை ஒன்று பகைத்துக் கொள்ளாத உறவு தேவையானதாகும். அரசியல் கட்சிகள் பலவீனமடையும் நிலையில் சிவில் அமைப்புக்கள் தொழில்சார் சங்கங்கள் எழுச்சியடைவது அவசியமானது. ஒருபக்கம் சமூக-பொருளாதார வாழ்வியலையும் மறுபக்கத்தில் அரசியலையும் கவனத்தில் கொள்வது சிவில் அமைப்புக்களது பங்களிப்பாக அமைய வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து வலுவான அமைப்பாக கட்ட வேண்டும். இந்தியாவின் நலனுக்கும் ஈழத்தமிழரது அரசியல் நலனுக்கும் இடையில் தெளிவான சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய நகர்வுகளே கோரிக்கைகளுக்கான வெற்றியை தரக்கூடியதாக அமையும். கோரிக்கைகளுக்கு பின்னால் இயங்கு தளம் தொடர்ச்சியானதாக அமைய வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews