அதிவேக நெடுஞ்சாலைகளில் இ.போ.ச பேருந்துகளை நடத்துநர்கள் இன்றி இயக்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயணிகளுக்கு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும். அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் 34 பயணிகளுக்கு போலி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்ட மோசடி அம்பலமானதையடுத்தே, பயணத்தின் ஆரம்பத்திலேயே பயணச்சீட்டு வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான இ-டிக்கெட்டுகளை (இலத்திரனியல் பயணச்சீட்டு) அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews