வனவிலங்கு அதிகாரிகள் வடக்கில் சித்திரவதைகள் செய்வதாக குற்றச்சாட்டு

அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று தமிழ் நபர் ஒருவரைத் தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குழு, நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் மேலும் தாக்குததல் நடத்துவோம் எனவும், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்வோம் எனவும் அச்சுறுத்தியதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 
2023ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி மாலை தனது வீட்டிற்கு வந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் நவரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சுமார் 4 மணியளவில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் என்னை பிடித்து அடித்து,  வீட்டில் சாராயம் இருக்கிறது, இறைச்சியும் இருக்கிறது எனக் இரவு முழுவதும் என்னை அடித்தார்கள். இரவு முழுவதும் கைவிலங்குடன் என்னைத் தொங்கவிட்டு அடித்தார்கள்.”

கடந்த 14ஆம் தினம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் குழுவொன்று வந்து தனது வீட்டை சோதனையிட்ட போது தாம் தனது கணவருடன் தோட்டத்தில் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளான நவரத்தினம் நவரூபனின் மனைவி அகலியா நவரூபன் தெரிவித்தார்.

இந்த குழுவில் 11 பேர் இருந்ததாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள ஏழு பேர் வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள்.

கிராம மக்களால் அறிவிக்கப்பட்டதையடுத்து வீட்டுக்கு வந்த நவரத்தினம் நவரூபன் மற்றும் அகலியா நவரூபன் ஆகியோர் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வீசி எறிவதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

“அன்று எங்கள் வீட்டில் இறைச்சி சமைக்கவில்லை. எங்கள் வீட்டில் பருப்பு, மீன், முருங்கைக்காய் சமைத்திருந்தோம். சோறு, கறயை தரையில் கொட்டி சோதனையிட்டுள்ளனர். அவர்களால் அன்று எங்கள் பிள்ளைகளுக்கும் உணவை கொடுக்க முடியாமல்போனது.”

இறைச்சி வைத்திருக்கும் நபர்களை பிடித்துத்தராவிட்டால், தன்னையும் தனது கணவரையும் தாக்கப்போவதாக கூறிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு, தானும் தனது கணவரும் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்ததை காணொளி பதிவு செய்துகொண்டு, தனது கணவரை கைது செய்து, அழைத்துச் சென்று இரவு முழுவதும் தாக்கியதாக அகலியா தெரிவிக்கின்றார்.

காணொளி ஆதாரம்

“அவர் வீட்டில் செய்த எதுவும் காணொளியில் இல்லை. கோபத்தில் நாங்கள் பேசியதை மாத்திரம் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் என் கணவரை அடித்துள்ளனர். நான் அவற்றை பதிவு செய்ய முயன்றபோது என் கைத்தொலைபேசியை அடித்து உடைத்துவிட்டனர்.”

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தனது கணவரை மறுநாள் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக கூறும் அகலியா நவரூபன், நீதிமன்றம் தனது கணவரை பிணையில் விடுவித்த பின்னரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தம்மை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

“நீதிமன்றத்தை விட்டு நாங்கள் வெளியே வர சொல்கிறார், நான் உனக்கு என்ன வழக்குப் போடுகிறேன் பார். நான் உன் வீட்டிற்கு தினமும் வருவேன் எனக் கூறினார், நீங்கள் ஏன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என நான் கேட்டதற்கு, என் கணவனை ஒவ்வெருநாளும் கொண்டுபோய் அடித்துவிட்டு கொண்டுவந்து விடுகின்றேன்.”

“என்னையும் கைது செயயப்போவதாக அச்சுறுத்துகின்றார்கள். எனக்கு இதற்கு நியாயம் வேண்டும்.”

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னரும் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தன்னை அச்சுறுத்தியதை நவரட்ணம் நவரூபனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உன்னை கஞ்சாவை வைத்தும், கசிப்புவை வைத்தும் பிடிப்பேன் என துன்புறுத்துகின்றனர்.”

Recommended For You

About the Author: Editor Elukainews