காட்டு யானைகளினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

கிளிநொச்சி கண்டாவளப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளினால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது ஒரு வார காலமாக தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதியில் மாலை 6:00 மணி தொடக்கம் அதிகாலை வரை காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் நாளாந்த கடமைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், ஆறு மணிக்கு பின்னர் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமும் 22.06.2023 கல்மடுநகர் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து வாழ்வாதாரமாக வைக்கப்பட்டிருந்த 45 க்கு மேற்பட்ட  10 வருடம் கடந்த பயன் தரக்கூடிய தென்னைகளை முற்று முழுதாக அழித்துள்ளதாக கவலை வெளியிடுகின்றனர்.
இது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரசியல்வாதிகள்  தாம் வாசிக்கும் பகுதிக்கு வருகை தந்து கல்மடு தொடக்கம் இரணைமடு பகுதிவரை மின்சார வேலி அமைக்கும் பணி விரைவாக முன்னெடுக்கப்பட இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் இன்று வரையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் இருப்பதாகவும் இதன் காரணமாக அப்பாவி மக்களாகிய நாமே பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இந்நிலை தொடருமாயின் தென்னை செய்கையையும் கைவிட்டு இப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கே மக்களும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews