
ரணில் அரசாங்கம் நாட்டின் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மேலதிக சலுகைகளை வழங்கி படைகளின் சம்பளத்தை மேலும் அதிகரித்துள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
யுத்தம் இல்லாத நாட்டில் பொருளாதாரம் மிக அதள பாதாளத்தில் விழ்ந்திருக்கும் போது வரவு செலவுத் திட்டத்தில் மிக அதிகமான நிதியை பாதுகாப்புச் செலவீனத்திற்காக ஒதுக்குவதுடன் அதற்கு மேலதிகமாக பல சலுகைகளையும் வழங்கியுள்ளனர் தமிழர் தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் படைகள் நிலை நிறுத்தப் பட்டுள்ளனர் இவர்கள் ஏன் எதற்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு சரியான பதில் இதுவரை அரசாங்கத்திடம் இல்லை.
இவ்வாறு படைகளுக்கு சலுகைகளை அதிகரித்த ரணில் அரசாங்கம் சாதாரண வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சிறு உதவித் தொகைப் பணத்தையும் கியூ ஆர் என்ற முறைமையை கொண்டு வந்து பறித்துள்ளது.
வருமானம் குறைந்த குடும்பங்கள் பொருளாதார பின்னடைவின் பின்னர் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள போது அவர்களுக்கான உதவு தொகை நிதியை மேலும் அதிகரித்து வழங்குவதற்கு பதிலாக ஏற்கனவே கொடுக்கப்படும் நிதியை பறிப்பது மிக மோசமான நடவடிக்கையாகும் எனவே படைகளுக்கு சலுகைகளை வழங்குவதை விட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகையை தடையின்றி வழங்க அரசாங்கம் முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.