
பொருளாதார உதவி தேவைப்படும் மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய விசேட தேவையுடைய நபருக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து மோசமாக நடந்துகொள்ளும் சம்பவம் ஒன்று காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.
ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை அங்கீகரித்த அதே நாளில் இதே சம்பவம் நடந்தது. மேலதிகமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அபாயத்தை எதிர்க்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் வரவு – செலவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்கும் வகையிலும், உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது.
கடந்த வருடம் 25 இலட்சம் பேர் ஏழைகளாக மாறியதாக மதிப்பிட்டுள்ள உலக வங்கி, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் 2.4 சதவீதம் உயரும் என்று கணித்துள்ளது.
மன்னார்-வவுனியா பிரதான வீதியின் கணேசபுரம் பகுதி மக்கள் கடந்த ஜூன் 28ஆம் திகதி தமது பெயர்களை “அஸ்வெசும” நலன்புரிப் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் சிலர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வீதியை திறக்க வந்த பறையனாலம் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போராட்டத்தில் பங்கேற்ற விசேட தேவையுடைய ஒருவரின் நாற்காலியை தூக்கியெறிந்ததை மாகாண ஊடகவியலாளர்கள் கமெராவில் பதிவு செய்துள்ளனர்.
வீதியோரத்தில் உட்கார வைக்காமல் தான் அமர்ந்திருந்த நாற்காலியை பொலிஸார் வீசி எறிந்தது ஏன் என விஷேட தேவையுடைய பாதிக்கப்பட்ட வயதான குறித்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் ஒன்றும் செய்ய முடியாத ஆள், நான் போராட்டத்தில் இருந்தபோது பொலிஸ் ஏன் என் நாற்காலியை காட்டுக்குள் வீசியது? என்னை வீதியோரத்தில் உட்கார வைத்திருக்க முடியுமே?. ஏன் செய்யவில்லை? ”
பொலிஸாரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொடர்ந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியகட்டு கிராம சேவகர், மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதுடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உண்மையில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் இருப்பதாக ஜனாதிபதி செயலகமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் ஜூன் 29ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில் கடிதத்தில், உண்மையில் சமுர்த்தி நிவாரணம் பெற வேண்டியவர்கள் 5 இலட்சத்தை அண்மித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
“முன்னதாக சமுர்த்தி பெற்றிராத, இந்த முறையும் நிவாரணம் கிடைக்காதவர்களை அவ்வப்போது போராட்டகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆதரவற்றோர், வீடற்றோர், நோயாளிகள் மற்றும் முதியோர்கள்தான் உண்மையிலேயே நிவாரணத்திற்கு தகுதியானவர்கள்.
இந்த குழு 5 இலட்சத்தை நெருங்குகிறது.”