வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என்று இலங்கை நம்புகிறது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக நம்பப்படுவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறியுள்ளார்.
கடந்த வாரம் சீனாவுக்கு சென்றிருந்த சப்ரி, அங்கு பல சுற்று விவாதங்களை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து பாரிஸ் கிளப், உருவாக்கிய மேடையில் சீனர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.
எனவே கடன் மறுசீரமைப்பில் சீனா இலங்கைக்கு உதவும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள வெளிநாட்டுக் கடனையும் அதன் சற்றே அதிகமான உள்நாட்டுக் கடனாக 42 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் மறுசீரமைக்க இலங்கை முயல்கிறது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, அரசாங்கம் அதன் உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வுக்கான இரண்டு மறுசீரமைப்பு செயல்முறைகளும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற இக்கட்டில் இலங்கை இருப்பதாக இந்திய பிடிஐ தெரிவித்துள்ளது.