மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று: தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை(video)

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால்  இந்தியா தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்ட தெற்கு கடல் பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கரையோரம் 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள்  மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெற்கு  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்று மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருவதால்  பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றிம்  கரையோரங்களில் மீன் பிடிக்கும் சிறு நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன் பிடித்து கரை திரும்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடையால் 600க்கும் அதிகமான விசைப் படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடையால்  சுமார் 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.
தமிழ் நாடு அரசுக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டு தரக்கூடிய  மீன்பிடித்தொழில்  நடைபெறாததால் சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews