
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வன்னியில் உள்ள அரச காணி, தனியார் நிறுவனமொன்றுக்கு பணப்பயிரை பயிரிடுவதற்கு வழங்கப்படவுள்ளதாகவும் இது அப்பகுதி தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தானும் முன்னர் நிராகரித்த கரும்புச் செய்கை வன்னியில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும், கரும்புச் செய்கை அந்த நிலத்திற்கு பொருத்தமற்ற பயிர்ச் செய்கை எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பிருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நான் முதலமைச்சராக இருந்தபோது சீனித் தொழிற்சாலை தொடர்பான கோரிக்கையை நிராகரித்தேன். இதுகுறித்து விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆய்வு செய்தார். இதனால் இலாபத்தை விட நட்டம் ஏற்படும் என அவர்கள் தெரிவித்தமையால், இதுத் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இந்த திட்டத்தை நான் நிறுத்தினேன்.“
தாய்லாந்து நிறுவனத்தினால் வவுனியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள சீனி தொழிற்சாலைக்கு 200 ஹெக்டேயர் காணியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 26ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.
“இந்த திட்டத்துடன் தொடர்புடைய தொழிற்சாலை வளாகம் மற்றும் தொடர்புடைய வசதிகளுக்காக, வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட 200 ஹெக்டேயர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திட்டத்தை செயற்படுத்துவதற்காக, வனவள பாதுகாப்புத் திணைக்களம் அந்த நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.” என ஜூலை 26 அன்று அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் வன்னியில் கரும்புச் செய்கையால் அப்பகுதி பொது மக்களின் நீர்த்தேவைக்கு பாதிப்பு ஏற்படுமென தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த பயிர் எங்கள் நிலத்திற்கு ஏற்றதல்ல. கரும்ப செய்கைக்கு அதிக தண்ணீர் தேவை. அதனால், நீர் இல்லாத பகுதியில் கரும்பு செய்கையை மேற்கொள்ளும் போது, சாதாரண மக்களின் தண்ணீர் தேவைகளுக்கு சிக்கல் ஏற்படும். அதனைவிட மண்ணின் அனைத்து சக்திகளையும் கரும்பு உறிஞ்சுக்கொள்ளும். இதுபோன்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.”
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
தமிழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட வன்னி காணிகளை அரசாங்கம் விடுவிக்கவில்லை எனவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை கரும்புச் செய்கைக்காக தனியார் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் உள்ளுர் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 30,000 ஏக்கர் அரச காணியை கரும்புச் செய்கைக்காக தனியார் நிறுவனத்திற்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.