
இலங்கையின் வடபால், யாழ்ப்பாணத்தின் மேற்கில் அமையப்பெற்ற வரலாற்று புகழ்பெற்ற பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பல்லாயிரம் பக்தர்கள் சூழ சிறப்பு இடம்பெற்றது.
இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெற்ற கர்மா கிரியைகள் ஆரம்பமான நிலையில் மூன்றாம் திகதி முதல் எண்ணெய்க்காப்பு இடம்பெற்றது.


ஸ்ரீ நாராயணப் பெருமானுக்கு சதுர்வேதங்கள் ,திருப்பாசுரங்கள் பத்தர்களால் இசைக்கப்பட பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் பூசிக்கப்பட்ட திருக்கும்பங்களானது யானை வாகனம் முன்னே வர சிவாச்சாரியர்களின் சிரசில் வலம்வந்தன.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தநாம சங்கீர்த்தனம் ஒலிக்க பிரதம வீதியூடாக எடுத்துவரப்பட்ட திருக்கும்ப நீரினால் ஆலயத்தின் ராஜகோபுரத்தின் பதினொரு கலசங்களுக்கும் குடமுழுக்கு இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலயத்தின் பரிவார மூர்த்திகளுடைய கலசங்களுக்கு குடமுழுக்கு இடம்பெற்றது.
ஸ்ரீ வரதாஜப் பெருமாள் ஆலயத்தின் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு மூலாலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்த நாமம் ஒலிக்க குடமுழுக்கு இடம்பெற்றது.
தட்சண கைலாய புராணத்தில் சிறப்பிக்கப்பட்ட இவ்வாலயத்தின் மஹா கும்ப்பாபிஷேகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் கலந்துகொண்டனர்.




