
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த யூன் 9ஆம் திகதியுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் நேற்று முன்தினம் 06/07/2023 வைரவர்சாந்தி உற்சவத்தினை முன்னிட்டு ஆலய தொண்டர் சபையின் நிதிப் பங்களிப்பில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த

100 மாணவர்களுக்கு தலா 4000 மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான காசோலைகள்(பவுச்சர்கள்) வழங்கிவைப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஆலய குருக்களான சிவதர்சக்குருக்கள், ஹரிதர்சக் கருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

சைவ ஆலயங்கள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவதில்லை என தற்காலத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் இவ்வாறு ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் மேம்படுத்தல் நலத் திட்டங்கள் மேற்கொள்வது வரவேற்கத் தக்கது என சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார ஸ்திரமின்மையான காலப்பகுதியில் ஆலய தொண்டர் சபையினால் உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.